×

உயர்அழுத்த மின் இணைப்பு பெற தகுதியான தொழில் நிறுவனங்களின் பட்டியல்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் வழங்கியது

சென்னை: உயர்அழுத்த மின்இணைப்பில் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த புதிய விளக்கத்தை, அதிகாரிகளுக்கு மின்சாரவாரியம் வழங்கியுள்ளது.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2 கோடிக்கும் மேலான வீடு மின் இணைப்பு; விவசாயம்- 21 லட்சம்; வணிகம்- 30 லட்சம் என சுமார் 2.70 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இதில், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு 100  யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை அரசு வழங்கி வருகிறது. விவசாய மின்இணைப்புகளை பொருத்தவரை சாதாரணம் மற்றும் சுயநிதி என இரண்டு பிரிவுகளில் மின்சாரம்  விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற பிரிவுகளுக்கும் விதிமுறைகளின்படி விநியோகம் நடக்கிறது.
இந்நிலையில் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்அழுத்த மின்இணைப்பில் எந்தெந்த நிறுவனங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த புதிய விளக்கத்தை மின்சாரவாரியம்  அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:  மின்சாரவாரியம் 1 - 46  கே.வி வரை சாதாரண மின் இணைப்பு வழங்குகிறது. இதற்கு, 60 நாட்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த வேண்டும். 47-111 கேவி வரை தாழ்வழுத்த மின்சார இணைப்பு ஆகும். இந்த இணைப்பு பெற்றுள்ள  நுகர்வோருக்கு, கம்பம், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற தளவாட பொருட்கள் மின்சாரவாரியம் வழங்கும். ஆனால் 112 கே.விக்கு மேல் மின் பளு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும். இந்த இணைப்பிற்கு மின்சார டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் தடவாள பொருட்களை  சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரார்களே வாங்கி  கொள்ள வேண்டும்.  மின்சாரம் மட்டும் வாரியம் கொடுக்கும். இதற்கான கட்டணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

 தற்போது இந்த உயரழுத்த மின்விநியோகப்பிரிவில் எந்தெந்த நிறுவனங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்து வாரியம் தெளிவுரை ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. இதில், குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கடல்நீரை  குடிநீராக்கும் தொழிற்சாலைகள், பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள், டிஎன்எஸ்டிசி ஒர்க்‌ஷாப், குளிர் சேமிப்பு அலகுகள் (கடல் உணவுகள்), ஜவுளி செயலாக்க அலகுகள், அனைத்து தொழிற்துறை  சேவை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்யும் நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.

இதற்கு ஒரு சிலர் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளை நடத்தி வந்தும், வேறு பிரிவில் மின்இணைப்பு பெற்றுள்ளனர். இது ஆங்காங்கு ஆய்வுக்கு செல்லும்போது தெரிய வருகிறது. எனவே இணைப்பு கொடுப்பதற்கு முன்பே அதிகாரிகள் தெரிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு, எவ்விதமான குழப்பமும் இருக்காது. மேலும் புதிய இணைப்பிற்கு வருவோருக்கும், அவர்கள் செய்யும் தொழிலை  பொருத்து மின்விநியோகம் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.  


Tags : companies , List of professional companies eligible for high voltage power supply:
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...