×

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி: மாலை தங்கத்தேரோட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளான நேற்றிரவு முக்கிய வாகன ேசவையான கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் 4 மாடவீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
கருடசேவைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் சுவாமியின் அவதாரங்கள், லீலைகள் குறித்த கலைநிகழ்ச்சிகளை மாடவீதிகளில் வரிசையாக செய்தவண்ணம் இருந்தனர்.

 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதில் 4 மாடவீதிக்கு செல்ல முடியாத 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் எல்இடி திரைகளில் தரிசித்தனர். சுவாமி வீதிஉலாவின்போது திடீரென கனமழை பெய்தது. கனமழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு மழையில் நனைந்தபடி தரிசனம் செய்தனர். கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் மழையில் நனைந்தபடி நடனமாடினர்.இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அப்போது சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.இன்று மாலை தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் வீதியுலா வருகின்றனர். இரவு கஜ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பிரம்மோற்சவம் நடந்துவருவதால்  லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தால் திருமலை திணறி வருகிறது. இந்நிலையில் பிரம்மோற்சவ 5வது நாள் மற்றும் கருடசேவை நிகழ்வு நடந்த நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை 84 ஆயிரத்து 639 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று அதிகாலை வைகுண்டத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரம் கழித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று எண்ணப்பட்டட உண்டியல் காணிக்கையில் ₹2.83 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Tags : Thirupathi Temple Brahmotsava ,Tirupati temple , approved ,vehicle,Brahmotsava, Evening ,Flow
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...