×

மது போதையில் வகுப்புக்கு வந்த பிளஸ் 2 மாணவிகள்: ஆட்டோ டிரைவருக்கு வலை

மூணாறு: மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு மதுவை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.கேரள மாநிலம், மூணாறு அருகே தேவிகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மூணாறு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கு 4 மாணவிகள் தள்ளாடிய நிலையில் வந்துள்ளனர். விளக்கம் கேட்டபோது உளறினர். இதுகுறித்து ஆசிரியர் உடனடியாக பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். அவர், மூணாறு சைல்டுலைன் ஊழியர் எட்வினுக்கு தகவல் தெரிவித்தார். எட்வின், மாணவிகளை பார்வையிட்டு தேவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 4 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர், 4 பேரும் மது அருந்தியதை உறுதி செய்தார்.

போதை தெளிந்ததும் மாணவிகளிடம் சைல்டுலைன் ஊழியர் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், மூணாறில் ஆட்டோ ஓட்டும் செல்வா (20) என்பவர், தங்களுக்கு வெள்ளை நிறத்தில் ஒரு மதுபானத்தை, தண்ணீர் பாட்டிலில் ஊற்றி கொடுத்து பள்ளியில் சென்று குடிக்க சொன்னதாகவும், இந்த மதுவை 4 பெரும் சேர்ந்து பள்ளி கழிப்பறையில் சென்று குடித்ததாகவும் கூறினர். பின்னர் மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்த, தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மூணாறில் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Auto Driver , Plus 2 ,students ,Alcohol,Web ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...