×

திருவனந்தபுரம் அருகே பரபரப்பு வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் சிகிச்சை பலனின்றி பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் ரசல்புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா(75). இவருக்கு இவருக்கு சுரேஷ், ஜெயா, தங்கச்சி, ஜெயகுமார் என 4 பிள்ளைகள் உள்ளனர். மகன் ஜெயகுமாருடன் தாய் லலிதா வசித்து வந்தார். மற்ற 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். லலிதாவின் பெயரில் 30 சென்ட் நிலமும், வீடும், வங்கியில் 14 லட்சம் பணமும் இருந்தது. ஜெயகுமார் தாயை மிரட்டி இவற்றை தனது பெயருக்கு எழுதி வாங்கி உள்ளார். இது சகோதரர்களுக்கு ெதரியாமல் இருக்க அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயகுமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும், பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி வைத்திருந்தார். இதனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும் உடலில் புண்களும் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது.இது குறித்து தகவல் அறிந்த பாலராமபுரம் கிராம பஞ்சாயத்து தலைவி வசந்தகுமாரி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அங்கு விரைந்து சென்று ஜெயகுமாரிடம் வீட்டை திறக்குமாறு கூறினர். ஆனால் அவர் வீட்டை திறக்க மறுத்து விட்டார். இதையடுத்து பாலராமபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்தும் ெஜயகுமார் கதவை திறக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போலீசார் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று லலிதாவை மீட்டு நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் ஜெயகுமாரை கைது செய்தனர்.இந்த நிலையில் மருத்துவமனையில் லலிதா தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது  உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து லலிதாவை வீட்டுக்கு கொண்டு  செல்லுமாறு டாக்டர்கள் கூறினர்.இதையடுத்து அவரை மகள் ஜெயாவின் வீட்டுக்கு கொண்டு  சென்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் லலிதா பரிதாபமாக இறந்தார்.  இதையடுத்து மகள் ஜெயாவின் வீட்டு தோட்டத்தில் லலிதாவின் உடல் அடக்கம்  செய்யப்பட்டது. அவது இறுதி சடங்கில் மகன் ஜெயகுமார் கலந்து கொள்ளவில்லை என உறவினர்கள்  தெரிவித்தனர்.

Tags : Thiruvananthapuram ,parabha ,house , Mother ,trapped , parabha,house ,Thiruvananthapuram
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!