×

ஐநாவில் உரையாற்றி திரும்பிய தமிழக மாணவிக்கு உற்சாக வரவேற்பு

அவனியாபுரம் :  தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளியில் படித்த மாணவி ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றி நாடு திரும்பினார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் கார்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரேமலதா (21). இவர் இளமனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பாட கல்வியோடு மனித உரிமை கல்வியையும் சேர்த்து படித்துள்ளார். அப்போது, ஐ.நா. மனித உரிமை மன்றம் சார்பில் எடுக்கப்பட்ட ‘எ பாத் டூ டிக்னிட்டி’ குறும்படத்தில் மாணவி பிரேமலதா தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது கல்லூரியில் படித்து வரும் பிரேமலதாவிற்கு கடந்த அக்.1 மற்றும் 2ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து  ஐநா மனித உரிமை கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றி விட்டு பிரேமலதா நேற்று மதுரை திரும்பினார். அவருக்கு மனித உரிமை கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவி பிரேமலதா கூறுகையில், ``என்னுடைய குறும்படத்தை அங்கு திரையிட்டு அது சம்பந்தமாக என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான பதில்களை அளித்தேன். மனித உரிமை கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கேட்டனர். மனித உரிமையை பற்றிய கல்வியை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் கற்றுத்தர வேண்டும் என்பதே எனது விருப்பம். மனித உரிமைக் கல்வியை எந்த அளவிற்கு கொண்டு வர இயலுமா அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்’’ என கூறினார்.

Tags : speaking student ,UN ,Tamilnadu Student Who Spoke , welcome, Student, madurai,Government school
× RELATED நேபாள நாட்டின் புதிய வரைபடம் இந்தியா,...