×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி: மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதலாவதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 28 நாள் சிறைவாசம் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் கடந்த 2-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு வீட்டு உணவு வேண்டும் என கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17ம் தேதி வரை அதாவது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. மேலும் அவரது உடல் நலத்தை அடிப்படையாக கொண்டு ப.சிதம்பரத்திற்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு வழங்கலாம். இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேபோல் மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில் டெல்லி எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மீண்டும் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை வருகிற 15ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் ஆர் பானுமதி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் உயர் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Court ,hospitalization ,PCIdambaram AIIMS ,Chidambaram ,hospital ,AIIMS , Court clears PC Chidambaram hospital in INX media case: AIIMS
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...