×

சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்தக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாடு முழுவதுமுள்ள 28 சைனிக் பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகமே ஏற்று நடத்த உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 28 சைனிக் பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு மாநில ஓய்வூதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசே ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசுக்கு கடந்த 2006ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட உத்தரவிடக்கோரி கொடைக்கானலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், நாட்டில் உள்ள 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்த வேண்டும் என கோரியுள்ளார். மேலும், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் போன்ற சிறிய மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமிழக அரசு கையெழுத்திடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தமிழக தலைமை செயலாளர், சைனிக் பள்ளி சங்க செயலாளர், அமராவதி நகர் பள்ளி முதல்வர் ஆகியோர், மனு குறித்து நவம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : High Court ,State Governments ,Central ,schools ,defense ministry ,Sainik ,takeover , Sainik School, defence ministry, Central Government, State Government, High Court
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...