×

திருப்பரங்குன்றத்தில் பிளாட்பார பாலம் இல்லாத ரயில் நிலையம்

திருப்பரங்குன்றம் : ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்திற்கு பாலம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியுறுவதாக குற்றம் சாட்டுவதோடு உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருகப்பெருமானின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாகவே தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமாரி, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் செல்கின்றன.

அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து பழநி. சென்னை, பெங்களூரு, மும்பை, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன.தமிழகத்தின் முக்கிய ஆன்மிக சுற்றுலாத் தலமான திருப்பரங்குன்றத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரம் உள்ளது. ஆனால், ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய பாலம் இல்லை.

இதனால் இரண்டாவது பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள், முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கும், இரண்டாவது பிளாட்பாரத்தில் உள்ள ரயிலில் ஏறுவதற்கும் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள், கைக்குழந்தையுடன் செல்லும் தாய்மார்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் சில நேரம் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பயணிகள் மட்டுமின்றி ரயில் நிலைய ஊழியர்களான கேங் மேன் உட்பட அனைவரும் ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்கின்றனர். மேலும் இந்த வழித்தடம் தற்போது இரட்டை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ரயில்வே சட்டப்படி தண்டவாளத்தை கடப்பது குற்றமாகும். ஆனால், திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் குற்றத்தைத் தடுக்க வேண்டிய ரயில்வே நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து உடனடியாக பிளாட்பாரம் பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Flat Railway Station ,Thiruparankundram Platform Bridge ,Thiruparankundram Railway Station , Platform,Railway Station ,Thiruparankundram , platfor Bridge
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...