×

கர்நாடகாவில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு: இந்த கல்வியாண்டிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், இந்த கல்வியாண்டு முதலே 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். கற்று கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், எதையும் கற்றுக்கொள்ளாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காகவும் இந்த முறையை அறிமுகம் செய்வதாக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, 9ம் வகுப்பு வரை தோல்வி இல்லை என்கின்றபோது கல்வியின் தரம் ஒருவேளை பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், 7ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கேள்வித்தாள்களை தயாரிக்கும் பொறுப்பை எஸ்எஸ்எல்சி மேற்கொள்ளும். மாவட்ட அளவில் விடைத்தாள்கள் திருத்தப்படும். ஒருவேளை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அடுத்த ஆண்டு நிச்சயம் அமல்படுத்தப்படும். மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை தீவிரமாக கருத்தில் கொள்ள பொதுத்தேர்வு வகை செய்யும் என்று கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையால் கர்நாடகாவில் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு முன்னேற தடை இல்லை என்ற விதி கைவிடப்பட்டுள்ளது.


Tags : Elections ,Karnataka Karnataka ,School ,education minister , Karnataka, Class 7,public exam, School Education Minister
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...