×

மும்பை ஆரே வனத்தில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டம்

மும்பை: மும்பையில் ஆரே வனத்தில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். மும்பையின் நுரையீரல் என்று அழைக்கப்படும் ஆரே வனத்தில் மெட்ரோ வாகன நிறுத்தம் அமைப்பதற்காக 2500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மாநகராட்சி முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய சிலமணி நேரங்களிலேயே மரங்களை வெட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுவட்டார மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உச்சநீதிமன்றத்தை தாங்கள் நாடவுள்ளதாகவும், அதுவரை மரங்களை வெட்டக் கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவாகியும் போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

மேலும் ஆரேவிற்கு செல்லும் அனைத்து வழிகளையும் முடக்கியுள்ளனர். இந்த நிலையில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அரசு அனுமதியளித்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு பிறகே மரங்களை வெட்ட வேண்டும் என்றும், ஆனால் அதிகாரிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள மும்பை மெட்ரோ ரயில் அதிகாரி அஸ்வினி பைட், மரத்தை வெட்டுவதற்கான உத்தரவு செப்டம்பர் 13ம் தேதி பிறப்பிக்கப்பட்டது என்றும், 28ம் தேதியுடன் 15 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : activists ,civilians ,forest ,Aare ,Mumbai ,Arere Forest , Mumbai, Are Forest, Tree, Resistance, Environmental Activists, Public Struggle
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...