×

நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான் -2 : நிலவில் மின்காந்த துகள்களையும் 'ஆர்பிட்டர்'கண்டுபிடித்தது

பெங்களூரு : சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள உயர் திறன் கொண்ட கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் : கடைசி நேரத்தில் செயல் இழந்த லேண்டர்


பூமியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. நீண்ட பயணத்துக்குப் பின்னா் நிலவைச் சென்றடைந்த சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து ஆா்பிட்டா் பகுதியும், விக்ரம் லேண்டா் பகுதியும் செப்டம்பா் 2-ம் தேதி தனித்தனியாகப் பிரித்துவிடப்பட்டன.பின்னா், லேண்டா் பகுதி படிப்படியாக நிலவுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டு, செப்டம்பா் 7-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் லேண்டா் உடனான தொடா்பு துண்டிக்கப்பட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது. அதே நேரம், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்த ஆா்பிட்டா், பிரித்து விடப்பட்ட தொலைவில் இருந்தபடி, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.

நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற புதிய தகவலை இஸ்ரோ வெளியிட்டது. அதே நேரம் விக்ரம் லேண்டர் கருவி வேகமாக தரை இறங்கியிருக்கக் கூடும் என்றும் அதனால் நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின் தரைப்பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்கள் வெளியீடு

இந்நிலையில், ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில், தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.100 கி.மீ.,உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கி.மீ., நீளமும், 3 கி.மீ., விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியுள்ளது . இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது. இந்த படம் கடந்த மாதம் (05.09.19) காலை, இந்திய நேரப்படி காலை 4.38 மணியளவில் எடுக்கப்பட்டது.

மேலும் 5 மீ., மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள், 1 முதல் 2 மீ., உயரம உடைய பாறைகளுடன் கூடிய நிலவின் புகைப்படங்கள் தெளிவாக எடுக்கப்பட்டது. 100 கி.மீ., உயர சுற்றுப்பாதையில் இருந்து மிக தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ள உயர் தெளிவு திறன் கொண்ட கேமரா, நிலவின் ஆய்வில் முக்கியமான கருவி எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களை தொடர்ந்து, அடையாளப்படுத்தி கொள்ள அந்தந்த ஆய்வில் தொடர்புடைய வானியலாளர்களின் பெயர்களை அந்த பள்ளங்களுக்கு வைப்பது வழக்கும். இந்த வகையில், இந்த பள்ளம், ஜெர்மானிய வானியல் அறிஞர் பலோன் எச் லட்விக் வான் போகஸ்லாவ்ஸ்கியின் பெயர் சூட்டப்பட்டது.

Tags : Orbiter ,moon , Chandrayaan-2, spacecraft, lander, ISRO, orbiter, electromagnetic particle, moon
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை