×

தனியார் மயமாக்கலுக்கான புதிய நடைமுறைக்கு ஒப்புதல் : மத்திய அமைச்சரவை முடிவு

புதுடெல்லி,: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை விரைவுபடுத்தும் புதிய நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.1.05 லட்சம் கோடி முதலீடு திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 24 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இதுவரை நிதி ஆயோக் மட்டுமே எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது குறித்து அடையாளம் கண்டு அரசுக்கு பரிந்துரைத்து வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையை விரைவுபடுத்தும் நோக்கில் புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையும் நிதி ஆயோக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பங்குகள் விற்பனை தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இத்துறையின் செயலாளரும் இனி பங்கேற்பார். சமீபத்தில் பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு மூலம் ரூ.1.45 லட்சம் கோடி சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்டும் இலக்கை எட்டுவது கடினமாகி உள்ளதால், அதை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : Adopting a New Procedure,Privatization, Cabinet Decision
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...