×

மொத்த வாக்காளர்களில் 6% பேர் மட்டுமே ஆர்வம்,..வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை

* கலெக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை தமிழகத்தில் 6 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். எனவே, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது. இதுவரைவாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 34 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். பொதுமக்கள், தேசிய வாக்காளர் சேவை தளம் (nvsp.in) மற்றும் பொது சேவை மையங்களில் சரி பார்க்கலாம்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பாக நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பொதுமக்களே வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஆர்வமாக உள்ளது. அதனால் பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று, இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இதுவரை ரூ.4.06 லட்சம் பணம், 7,346 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.9.57 லட்சம். அதேபோன்று, ரூ.3.36 லட்சம் மதிப்பு வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் மொத்தம் 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் பெயர், விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை இருந்த இடத்தில் இருந்தபடி, செல்போன் ஆப் மூலம் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும், திருத்தங்கள் செய்து கொள்ளவும் தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. இது வருகிற 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஆனால் கடந்த 35 நாட்களில் 35 லட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களே இதை பயன்படுத்தி உள்ளனர். இது, தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 6 சதவீதம் மட்டுமே ஆகும்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள  தேசிய வாக்காளர் சேவை தளம் (nvsp.in) திட்டத்துக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை என்பதையே இது காட்டுகிறது. வாக்காளர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால், தேர்தல் நேரங்களில் தங்கள் பெயர் இல்லை, வேறு வாக்காளர் மையத்துக்கு பெயரை மாற்றி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை தவிர்க்க முடியும். அதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் செல்போன் மூலம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

Tags : electorate ,public ,voters , Voters, voter verification, the public
× RELATED திரிபுரா மக்களவை தொகுதியில் 109.9% வாக்குப்பதிவான விநோதம்!