×

கடைசி நேரத்தில் பரபரப்பு பாஜவிடம் ஆதரவு கேட்டது அதிமுக: 2 தொகுதியிலும் பிரசாரம் செய்ய தயார் என்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதேபோல விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தமாகா, சமக உள்ளிட்ட தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், வேட்புமனு தாக்கல் முடியும் வரை பாஜவிடம் அதிமுக தரப்பில் ஆதரவு கேட்கப்படவில்லை.  இப்படி பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிற்பகல் சென்னை தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜ தலைவர் இல.கணேசன், பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து பாஜ போட்டியிட்டது. அந்த கூட்டணி அன்று தொடங்கி தொடர்ந்து இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது.  நடைபெற இருக்கக்கூடிய இரண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட பாஜவின் ஆதரவு கேட்டு பாஜவின் அகில இந்திய தலைமையிடம் அதிமுக சார்பில் பேசியிருக்கிறார்கள். அதைதொடர்ந்து முறைப்படி தமிழக பாஜ தலைவர்களிடம் ஆதரவு கேட்க வேண்டும் என்று வந்திருந்தார்கள்.  இந்த 2 தொகுதிக்கான தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது அந்த நேரத்தில் தெரிவிப்போம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவோம்” என்றார். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆதரவு தருவதாக பாஜ தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். இந்த கூட்டணி தொடர்கிறது” என்றார்.

Tags : AIADMK ,BJP ,Announcement , BJP, AIADMK
× RELATED அதிமுகவை குறிவைக்கும் கொரோனா: அதிமுக...