×

தமிழகம் முழுவதும் மண்டல அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படுவதில்லை: அதிகாரிகள் அலைக்கழிப்பு ,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் மண்டல அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் விசாரணை நடத்தாமலே தள்ளுபடி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 99 லட்சத்து 53 ஆயிரத்து 681 மின்னணு ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் அரிசி பெறும் கார்டுகள் மட்டும் சுமார் 1 கோடியே 85 லட்சம். 10 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க தமிழகத்தில் மட்டும் 34 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.சமீபகாலமாக தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள். குறிப்பாக, திருமணம் ஆனவர்கள் அல்லது கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்தவர், தற்போது எந்த இடத்தில் பெயர் இருக்கிறதோ அங்கிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக சான்றிதழ் வாங்கி கொடுத்தால் எளிய முறையில் ரேஷன் கார்டு வழங்கும் முறை இருந்தது.

ஆனால், தற்போது, கூட்டு குடும்பத்தில் இருந்து திருமணம் ஆகி புதிய கார்டு கேட்டு அந்தந்த மண்டல அலுவலகம், தாலுகா மையத்தில் விண்ணப்பித்துள்ள நிலையிலும் பலருக்கு எந்தவித தகவலும் கூறாமல் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருவரிடம் ஆதார் கார்டு இருந்தால் இந்தியா முழுவதும் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்று மத்திய அரசு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் சென்னை மற்றும் புறநகர் மண்டல அலுவலகங்களில் ரேஷன் கார்டு கேட்டு பல ஆண்டுகளாக கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தற்சமயம் பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு தரப்படுவதால் அதற்கு ஆதாரமாக குடும்ப அட்டை வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் ரேஷன் கார்டு இல்லாமல் பெற்றோர்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு பெற முடியாத நிலை உள்ளது.

பரங்கிமலை, தாம்பரம், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், தி.நகர், மயிலாப்பூர் போன்ற மண்டலங்களில் பணி செய்யும் குடும்ப அட்டை பிரிவு (கவுன்டர் கண்காணிப்பாளர்) பொதுமக்களை வாய்க்கு வந்தபடி திட்டி அனுப்புவதுடன், மரியாதை இல்லாமல் பேசி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். புதிய குடும்ப அட்டை, பெயர் நீக்கம் போன்றவைக்காக கணினி மூலம் மனு செய்தால் விசாரணை செய்யாமலேயே மனு செய்த 4 மணி நேரத்தில் அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விடுகின்றனர்.  அரசு அதிகாரிகள் அலட்சியமான பதிலையே தெரிவிக்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் ஆண்டுக்கணக்கில் பணி
சென்னை மற்றும் புறநகர் பகுதி மண்டல அலுவலகத்தில் கார்டு பிரிவு கண்காணிப்பாளர் ஒரே இடத்தில் 5 வருடங்களுக்கும் மேல் பணிபுரிந்து வருவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியில் இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் இந்த விதிமுறைகளை இந்த துறையில் பின்பற்றுவது இல்லை. அதனால் கட்டாயம் 3 வருடங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்ய வேண்டும். இதை புதிய உணவு ஆணையாளர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Zonal Offices ,Tamil Nadu ,Officials Zonal Offices , Tamil Nadu, Regional Offices, New Family Card, Public
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...