×

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: முக்கிய புரோக்கர் ரஷீத்தை தேடி பெங்களூரில் தனிப்படை முகாம்: முறைகேடு நடந்தது குறித்து அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: நீட் தேர்வில் முக்கிய புரோக்கர் ரஷீத்தை தேடி சிபிசிஐடி தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர் வெங்கடேசன். இவரது மகன், உதித் சூர்யா. இவர், ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த பிரிவின் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி உதித் சூர்யா, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராகுல், டேவிட், இர்பான் மற்றும் அவர்களது தந்தை ஆகியோரை கைது செய்தனர். இந்த மாணவர்களும் ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வை எழுதியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ஒரு மாணவியும் சிக்கியுள்ளார். ஆனால் அவரது புகைப்படத்தில் சில சந்தேகம் எழுந்ததால், தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவர்கள் உதித் சூர்யா, ராகுல், டேவிட், இர்பான் மற்றும் 36 மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள மணமை தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் படித்துள்ளனர். அதன்பின்னர் அந்தக் கல்லூரிக்கு அங்கீராம் இல்லை என்று தெரியவந்தது. இதனால், இந்தக் கல்லூரியில் படித்த 36 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரி செய்த தவறுக்காக மாணவர்களை மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று நீதிமன்றமும் அறிவித்து விட்டது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் விழித்தனர். அதன்பின்னர் அவர்களில் பலர் அண்ணா நகரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்தனர். மணமை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள்தான், குறுக்கு வழியில் மீண்டும் மருத்து கல்லூரியில் சேர இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது 4 மாணவர்கள் சிக்கியுள்ளனர். ஒரு மாணவியின் தேர்வில் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனால் அவரது நீட் விண்ணப்பம் மற்றும் சேரும்போது உள்ள புகைப்படத்தை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு வந்த பிறகுதான் அவர் தவறு செய்தாரா என்பது தெரியவரும். ஆனாலும், மணமை கல்லூரியில் படித்த 36 மாணவர்களுமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அந்த மாணவர்களின் பட்டியலை வைத்து கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் யார்? அந்த மாணவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? 36 பேருமே முறைகேடு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்களா? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது பிடிபட்ட 4 மாணவர்களின் பெற்றோர், அனைவரும் வேலூரைச் சேர்ந்த புரோக்கர் வேதாச்சலம் என்பவர் மூலம், ரஷீத் என்ற புரோக்கரை அனுகியுள்ளனர். ரஷீத், பெங்களூரைச் சேர்ந்தவர்.

இவர்தான் மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய ஊர்களில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் மூலம் போலியான மாணவர்களை தயாரித்து, அவர்களை தமிழக மாணவர்களின் பெயர்களில் தேர்வு எழுதியது தெரியவந்தது. இதனால் தற்போது புரோக்கர் வேதாச்சலம் சிக்கியுள்ளார். ஆனால் ரஷீத் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை கைது செய்த பின்னர்தான், வட மாநிலங்களில் போலியான ஆட்களை தயாரித்து நீட் தேர்வு எழுத உதவிய பயிற்சி மையங்கள், அதிகாரிகள் குறித்த முழு விவரமும் தெரியவரும். இதனால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.


Tags : Rasheed ,camp ,Bangalore ,Rashid , Need selection, impersonation: Broker Rasheed
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு