×

அமைச்சர்கள் தொடர் டார்ச்சர்? லீவில் சென்றார் மதுரை கலெக்டர்: பதவி ஏற்ற மூன்றே மாதங்களில் பரபரப்பு

மதுரை: மதுரை கலெக்டர் ராஜசேகர் பதவி ஏற்ற மூன்றே மாதத்தில் திடீரென்று நேற்று முதல் விடுமுறையில் சென்றார். அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ மாறி, மாறி கொடுத்த நெருக்கடியை தாங்க முடியாமல் இந்த முடிவு எடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திர மையத்திற்குள் பெண் தாசில்தார், அத்துமீறி நுழைந்த விவகாரத்தில், மதுரை கலெக்டராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டு, நாகராஜன்  பொறுப்பேற்றார். இவர் தேர்தல் முடிந்தும் கலெக்டராக நீடித்தார். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் 1,573 பேருக்கு ஏற்கனவே நேர்முக தேர்வு நடத்தி முடித்து நியமனம் செய்யப்படாமல் இருந்தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தலையீட்டினால், அந்த கோப்பில் முந்தைய கலெக்டர்கள் கை வைக்காமல் மூலையில் போட்டு வைத்து இருந்தனர்.

 இந்த கோப்புகளை தூசி தட்டி கலெக்டர் நாகராஜன் ஒரே நாளில் 1,573 அங்கன்வாடி பணியாளர் நியமன உத்தரவு பிறப்பித்து, ஆணையை அவர்களின் வீடு தேடி வழங்க செய்தார். இதன் எதிரொலியாக நாகராஜன் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புது கலெக்டர் உடனடியாக நியமனம் செய்யப்படவில்லை. அப்போது டிஆர்ஓ பொறுப்பிலும் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு பின் மதுரை கலெக்டராக  ராஜசேகர் நியமிக்கப்பட்டு ஜூலை 1ல் பதவி ஏற்றார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் ராஜசேகர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக டிஆர்ஓ செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் விசாகன், கூடுதல் கலெக்டர் பிரியங்கா ஆகியோர் வெளியிட்டனர். கலெக்டர் ராஜசேகர் நேற்று முதல் திடீரென்று விடுமுறையில் சென்று விட்டார். அவர் எந்த தேதி வரை விடுமுறை எடுத்துள்ளார், மீண்டும் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்குறி கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலெக்டர் ராஜசேகர் பதவிக்கு வந்த நாள் முதல் பல்வேறு தலையீடுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்ததாக தெரிகிறது. குறிப்பாக  அமைச்சர்கள், ஆளுங்கட்சியில் அதிகாரம் படைத்த ஒரு எம்எல்ஏ என மூவரின் நெருக்கடி மாறி மாறி ஏற்பட்டு தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே காரியத்திற்கு இரு அமைச்சர்கள் சிபாரிசு செய்து அழுத்தம் கொடுப்பதும், சில நேரங்களில் எம்எல்ஏவும் சேர்ந்து மூவரும் அழுத்தம் கொடுப்பதுமாக இருந்ததாம். இதில் யார் சொல்வதை கேட்பது என்பதில் கலெக்டர் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு அமைச்சர்கள் விழா தனித்தனியாக நடக்கும்போது, இரண்டிலும் பங்கேற்க முடியாத நிலையில், ஒன்றில் பங்கேற்கும்போது, இன்னொரு அமைச்சரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்ததாகவும் தெரிகிறது.   இதுபோன்ற நெருக்கடிகளை தாங்க முடியாமல், கலெக்டர் விடுமுறையில் சென்று விட்டதாக பேசப்படுகிறது.



Tags : Collector ,office ,Madurai ,Madurai Collector , Collector of Ministers, Torture, Madurai
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...