×

வேட்புமனு பரிசீலனை செய்வதற்கு எதிர்ப்பு,..நிலவள வங்கி தேர்தல் நடத்தும் அலுவலரை அதிமுகவினர் கடத்தல்: போலீசில் புகார்

திருப்பத்தூர்: தேர்தல் வேட்பு மனு பரிசீலனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்திலி நிலவள வங்கி தேர்தல் நடத்தும் அலுவலரை அதிமுகவினர் கடத்தி சென்றதாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொடக்க வேளாண்மை நிலவள வங்கி தேர்தல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்தது. அப்போது, பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. இதனால் திமுகவினர் தொடர்ந்து பலமுறை தேர்தல் நடத்தகோரி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கந்திலி நிலவள வங்கி தலைவர் மற்றும் துணைத்தலைவர், இயக்குனர்கள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, நேற்று முன்தினம் திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவினர் 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர், நேற்று வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் தலைமையில் நடைபெற இருந்தது.

இதனால், காலையில் திமுகவினர் வங்கிக்கு வந்தனர். ஆனால் மாலை வரை தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் வங்கிக்கு வரவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வந்த பிறகு  வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கும். அவ்வாறு அவர் வரவில்லை என்றால் தேர்தல் வேட்பு மனுவை நாங்கள் தள்ளுபடி செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் கந்திலி காவல் நிலையத்திற்கு சென்று தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அதிமுகவினர் தேர்தல் அதிகாரி சண்முகத்தை கடத்திச் சென்று திருப்பத்தூரில் அடைத்து வைத்திருப்பதாக புகார் அளித்தனர்.

பின்னர், அவரை கண்டுபிடித்து தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகார் செய்தனர்.  தொடர்ந்து வங்கி முன் அமர்ந்து தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாலையில் வந்த 2 அதிகாரிகள் நிர்வாக ரீதியாகவும் சட்டம் ஒழுங்கு காரணமாகவும் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப்படுகிறது என்று தேர்தல் அலுவலர் கையொப்பத்துடன் நோட்டீஸ் ஒட்டினர்.  இதைப்பார்த்த அதிமுக கந்திலி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் பூபதி, முன்னாள் கந்திலி ஒன்றிய செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் அதிகாரிகள் ஒட்டிய அறிவிப்பு நோட்டீசை கிழித்து எறிந்தனர்.

Tags : election officer ,CEO ,kidnapping ,Land Bank ,election , Candidate review, Land Banking election, AIADMK, abduction
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...