×

வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு: மத்தியஅரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை : வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பதற்கு கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   மத்தியில் மோடி தலைமையில் 2014ல் ஆட்சி அமைந்த பிறகு, தொடர்ந்து இந்து தேசியவாதிகள் என்ற போர்வையில் பிற மதத்தினர் மீது தாக்குதல் தொடுப்பது, படுகொலை செய்வது என்று வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தேவாலயங்கள் மீதும், கிறிஸ்துவர்கள் மீதும் சிறுசிறு தாக்குதல்கள் நடைபெற்றிருந்தாலும், இஸ்லாமியர்கள் அதிக அளவில் குறிவைத்து தாக்கப்பட்டனர்.  இந்துத்வா பிரசாரத்தில் பெரும் கூட்டம் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் சிறுபான்மையினர் மீது அவர்கள் திட்டமிட்டே வெறுப்பை வளர்த்து வருகின்றனர். இதற்காகவே பல்வேறு புதிய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய தாக்குதல்களை பாஜ தலைவர்கள் கண்டுகொள்வதில்லை. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்வதில்லை.

 பாஜ ஆட்சியில் பெருகி வரும் சகிப்பின்மை காரணமாக தாக்குதல்கள், படுகொலைகள் நடந்து வருவதை பிரதமர் மோடிக்கு உணர்த்தும் வகையில் 49 பிரபலமானவர்கள் பகிரங்கமாக கடிதம் எழுதினர். இதில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பெனகல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா,  நடிகை ரேவதி ஆகியோர் அடங்குவர்.   பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இத்தகைய வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடும், சமூக அக்கறையின் காரணமாகவும் கடிதத்தை எழுதியுள்ளனர். இக்கடிதத்தை எழுதியவர்களுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பீகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஜனநாயக விரோத, அச்சுறுத்தல் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

 சங்பரிவார் அமைப்புகளால் தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி, கவுரி லங்கேஷ் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு கடிதம் எழுதி முறையிட்ட செயலுக்காக அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுப்பதை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.   நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இவர்கள் மீது புனையப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Modi ,celebrities ,KS Alagiri Celebrities , Prime Minister Modi, Central Government, KS Alagiri, condemnation
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...