×

கோயில் நில ஆக்கிரமிப்பை தடுத்த அதிகாரி மீது தாக்குதல் அமமுக பிரமுகர் கைது

பல்லாவரம்: திரிசூலம் பகுதியில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தட்டிக்கேட்ட, செயல் அலுவலரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திரிசூலம் சிவசக்தி நகரில் திரிசூல நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. இதனை, அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரும், தற்போதைய அமமுக பிரமுகருமான சுப்புராஜ் (34) என்பவர் அபகரிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் அறநிலைய துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோயில் செயல் அலுவலர்  சக்திவேல் (45) என்பவர், சம்பவ இடத்துக்கு சென்று, ‘‘கோயிலுக்கு சொந்தமான இடத்தை நீங்கள் எப்படி அபகரிக்கலாம்,’’ என சுப்புராஜிடம் கேட்டுள்ளார்.

அப்போது சுப்புராஜ், ‘‘அரசியல்வாதியான என்னிடமே கேள்வி கேட்கிறாயா?. உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன். ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு,’’ என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்புராஜ், ‘‘சக்திவேலை ஆபாசமாக பேசி, கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சக்திவேல் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அமமுக பிரமுகர் சுப்புராஜை  கைது செய்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : temple landlord ,Temple ,landlord , Man arrested, attacking ,temple landlord
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...