×

தொடர்ந்து 5வது முறையாக கடன் வட்டியை குறைத்தது ஆர்பிஐ : இஎம்ஐ, டெபாசிட் வட்டி குறையும்

புதுடெல்லி: குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி கால் சதவீதம் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில், நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடந்தது. இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி எனப்படும் குறுகிய கால கடன் வட்டியை கால் சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.  ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை தொடர்ந்து 5 முறை வட்டியை குறைத்துள்ளது. நேற்று வரை மொத்தம் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. ரெப்போ வட்டி குறைத்தும் அந்த அளவுக்கு வங்கிகள் வட்டி குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. இதை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதியில் இருந்து ரெப்போ வட்டி, அரசு கடன் பத்திரங்கள் உள்ளிட்ட சந்தை விகிதங்களை அளவாக கொண்டு வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய நடைமுறைப்படி வட்டி குறையலாம். அதுபோல், டெபாசிட் வட்டியும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிந்தது. இது ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட மிக குறைவு. எனவே, நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அடுத்த நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் டிசம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபோல், ஊரக பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கடன் வழங்குதலை அதிகரிக்கும் வகையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு உச்சபட்ட கடன் வரம்பு 1 லட்சம் என இருந்ததை 1.25 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு குடும்ப வருமான வரம்பு ஊரக பகுதிகளில் 1.25 லட்சமாகவும், நகர் பகுதிகளில் ₹2 லட்சமாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியிடம் 30,000 கோடி இடைக்கால டிவிடென்ட் கேட்பதாக வந்த தகவல் குறித்து சக்தி காந்ததாசிடம் கேட்டதற்கு, ஊடகங்கள் மூலம்தான் இதை அறிந்து கொண்டேன். அரசு இதுவரை கேட்கவில்லை’’ என்றார்.

Tags : EMI , Reduced credit interest , 5th consecutive year RBI, EMI, Deposit Interest Decrease
× RELATED மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் எமி ஜாக்சன்