×

விஜய் ஹசாரே கோப்பை ஜம்மு காஷ்மீரை வென்றது தமிழகம்

ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஜம்மு காஷ்மீரை 8 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வென்றது. சிறப்பாக ஆடிய முரளி விஜய் சதம் விளாசினார். ஜெய்பூரில் நேற்று நடந்த போட்டியில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜம்மு காஷ்மீர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கம்ரான் இக்பால் அதிகபட்சமாக 67 ரன்னும், எஸ்.எஸ்.பண்டிர் 66, அப்துல் சமாத் 50 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், விக்னேஷ், முருகன் அஷ்வின், பாபா அபராஜித் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய தமிழக அணி, 239 ரன் இலக்கை எளிதாக எட்டியது. துவக்க ஆட்டக்காரர் முகுந்த் 21 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இவர், 131 பந்தில் 117 ரன் விளாசி ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தமிழக அணி 48 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்து வென்றது. சி பிரிவில் தமிழக அணி 5 லீக் போட்டியில் 5 வெற்றியுடன் 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Tags : Kashmir ,Tamil Nadu ,Jammu , Tamil Nadu won , Vijay Hazare Trophy , Jammu and Kashmir
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...