×

எல்கர், டிகாக் அபார சதம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் அஷ்வின் : முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 385/8

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் எல்கர், டிகாக் அபார சதம் அடிக்க தென் ஆப்ரிக்க அணி சரிவிலிருந்து மீண்டது. அதே சமயம், அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களுடன் உள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 215 ரன், ரோகித் ஷர்மா 176 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களுடன் தடுமாற்றத்துடன் இருந்தது. எல்கர் 27, பவுமா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பவுமா (18)  இஷாந்த் ஷர்மா வேகத்தில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. இந்நிலையில், எல்கர்  டுபிளெஸ்சி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருமுனையில் டுபிளெஸ்சி அரைசதம் அடிக்க, மறுமுனையில் எல்கர் சதத்தை தொட்டார். 115 ரன் சேர்த்த நிலையில், அஷ்வின் இந்த ஜோடி பிரித்தார்.

இந்திய மண்ணில் தனது முதல் அரைசதம் கண்ட டுபிளெஸ்சி 55 ரன்னில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிகாக் ஒருமுனையில் நங்கூரமிட்டார். இவர் எல்கருடன் இணைந்து விரைவாக ரன் சேர்க்க தென் ஆப்ரிக்காவின் ஸ்கோர் கணிசமாக அதிகரித்தது.  இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த எல்கர் 269 பந்தில் 150 ரன்களையும், டிகாக் 149 பந்தில் சதத்தையும் எட்டினர். இந்த ஜோடியால் இந்தியாவின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. இந்தநிலையில் அஷ்வின், ஜடேஜா சுழல் கூட்டணி அணிக்கு கைகொடுத்தது. ஜடேஜா சுழலில் எல்கர் (160) ஆட்டமிழந்தார். எல்கர்- டி காக் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 164 ரன் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அஷ்வினின் ஆட்டம் ஆரம்பமானது. 111 ரன் எடுத்திருந்த டிகாக்கை வெளியேற்றிய அஷ்வின், பிளாண்டரை டக் அவுட்டாக்கி, டெஸ்டில் 27வது முறையாக 5+ விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களுடன் உள்ளது. முத்துசாமி 12, மகராஜ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய தரப்பில் அஷ்வின் 5, ஜடேஜா 2, இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இந்திய அணி 117 ரன் முன்னிலையுடன் உள்ளது. இன்றைய 4ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் எஞ்சிய 2 விக்கெட்டை விரைவில் வீழ்த்தும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடையும். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் 4ம் நாள் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.

ஜடேஜா ‘200’

நேற்றைய ஆட்டத்தில் முக்கியமான எல்கர் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் தனது 200வது விக்கெட்டை எட்டினார். 44வது டெஸ்டில் இந்த மைல் கல்லை எட்டிய இவர், அஷ்வினுக்குப் பிறகு விரைவாக 200 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன், அஷ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டி உள்ளார். ஹர்பஜன் சிங் 46, கும்ப்ளே 47 டெஸ்ட்டில் 200வது விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். அதே சமயம், குறைந்த போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் ரங்கனா ஹெராத் (47 போட்டி), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் (49) உள்ளனர்.

Tags : South Africa ,Ashwin ,innings , South Africa 385/8 , first innings
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...