×

திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் கோலாகலம் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை: திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. இதையொட்டி, பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம் என பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை (மகாவிஷ்ணு) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதிஉலா வந்தார்.

தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்திற்கு இடையே வீதிஉலா வந்து அருள்பாலித்தார். முன்னதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் பங்கேற்றனர். நான்கு மாடவீதியில் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே அமர இடம் இருந்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தும் சுவாமி வீதி உலாவை நேரில் காண முடியாமல் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட எல்இடி திரைகளில் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Temple Promotion Day ,Malayalappa Swamy Street ,Tirupati Temple Promotion , 5th day, Tirupati Temple Promotion
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...