×

வழக்கு செலவுக்காக கொள்ளையடித்தோம்: தம்பதியை தாக்கிய சம்பவத்தில் கைதான 2 பேர் வாக்குமூலம்

கடையம்: கடையம் முதிய தம்பதியை கொல்ல எங்களுக்கு மனம் வரவில்லை. வழக்கு செலவுக்காக மட்டுமே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம் என கைதான 2 பேர் வாக்குமூலம் அளித்தனர். நெல்லை மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செந்தாமரை. கடந்த ஆக.11ம் தேதி இரவு இவர்கள் வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், தம்பதியை தாக்கினர். பதிலுக்கு அவர்களும், எதிர்த்து போராடி கொள்ளையர்களை விரட்டியடித்தனர். எனினும் செந்தாமரை அணிந்திருந்த 37 கிராம் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். முதிய தம்பதியின் வீரதீர செயலை பாராட்டி சுதந்திர தினவிழாவில் தமிழக அரசு சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2ம் தேதி கீழக்கடையம் ரயில் நிலையம் அருகே பாலமுருகன் (30), பெருமாள் (54) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
நாங்கள் இருவரும் ஜெயிலில் இருக்கும்போது நண்பர்களானோம். எங்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளிவந்த நாங்கள் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். மேலும் வழக்கு செலவுக்கும் எங்களிடம் பணம் இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி செந்தாமரை என்பவர் கோயிலுக்கு அதிக நகைகள் அணிந்து செல்வது தெரிய வந்தது.இதையடுத்து அவரது வீட்டில் கொள்ளையடித்தால் அதிக நகைகள் கிடைக்கும் எனக்கருதினோம். அதன்படி சம்பவம் நடந்த முந்தைய வாரம் கல்யாணிபுரம் சென்று அவரது வீட்டை நோட்டமிட்டோம். அப்போது அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நாங்கள் அருகில் உள்ள தோப்புக்கு சென்றோம். அங்கிருந்த மோட்டார் அறையை உடைத்து அதிலிருந்த 2 அரிவாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டாம். அதன்பிறகு மறுநாள் ஆக.11ம் தேதி முகமூடி அணிந்து கொண்டு அரிவாளுடன் சண்முகவேல் வீட்டிற்கு சென்றோம். அப்போது சண்முகவேல் வெளியில் அமர்ந்து இருந்தார். அவரது கழுத்தில் துண்டால் இறுக்கி கீழே தள்ளினோம். ஆனால் எதிர்பாராதவிதமாக பதிலுக்கு அவர்களும் எங்களை தாக்க தொடங்கி விட்டனர். இந்த தாக்குதலில் சண்முகவேலு, பெருமாளுடையை ஒரு முகமுடியை கழட்டினார். மேலும் செந்தாமரை நீங்கள் தாக்கும் வீடியோ பதிவாகிறது என கூறியதால் அவரது கழுத்தில் கிடந்த நகையை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினோம்.
கொள்ளை சம்பவம் நடந்து 50 நாட்களாகி விட்டதால் எங்களை போலீசார் பிடிக்க மாட்டார்கள் என்று கருதி ேகரளாவில் இருந்து இருவரும் கடையம் வந்தோம். அப்போது எங்களை போலீசார், மடக்கி பிடித்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : assault , Case, robbery, couple, confession
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...