×

மறு வாக்கு எண்ணிக்கை முடிந்தும் ராதாபுரம் தொகுதி முடிவு நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நடவடிக்கை

சென்னை: ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை தொடங்கி இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைக்கு 2016ல் நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, ராதாபுரம் தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளை மீண்டும் எண்ணக்கோரியும் திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. எனவே, 19, 20, 21ம் சுற்றுவாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களின் கன்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்.  இதற்காக 3 சுற்று வாக்கு இயந்திரங்களையும், மொத்தம் பதிவான தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், தபால் வாக்குகளை 4ம் தேதி காலை 11.30 மணிக்கு எண்ணத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, தபால் வாக்குச்சீட்டுகள் இருந்த இரும்பு பெட்டி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆயுதம் தாங்கிய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை ராமையன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராமையன்பட்டி ஒழுங்கு முறை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடைசி 3 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான 36 இயந்திரங்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களும், தபால் வாக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் உயர் நீதிமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கத்திற்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.  சரியாக 11.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் சாய் சரவணன் கண்காணிப்பில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணைய பணியாளர்கள் 24 பேர் ஈடுபட்டனர். தேர்தலில் போட்டியிட்ட இன்பதுரை, அப்பாவு ஆகியோர் நேற்று காலை 9.30 மணிக்கே உயர் நீதிமன்றத்திற்கு வந்தனர். பின்னர் 11.30 மணிக்கு அப்பாவு சார்பில் அவரது ஏஜென்ட்களாக மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ரவிச்சந்திரன் ஆகியோரும், அதிமுக வேட்பாளர் இன்பதுரை மற்றும் அவரது வக்கீல் செந்தில் ஆகியோரும், மற்ற வேட்பாளர்கள் சார்பில் அவர்களின் ஏஜென்ட்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்றனர்.

செல்போன் மூலம் வாக்கு எண்ணிக்கையை தெரிவிக்க கூடாது என்று உள்ளே சென்ற அனைவருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.  தேர்தலில் மொத்தம் பதிவான 1508 தபால் வாக்குகளையும் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, 19ம் சுற்று மின்னணு வாக்கு பதிவு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து 20 மற்றும் 21ம் சுற்றுக்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 3 சுற்று வாக்கு எண்ணிக்கையும் 6.40 மணிக்கு முடிவடைந்தது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வௌியிட தடை விதித்துள்ளதால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்டது. இந்த முடிவு அறிக்கையை பதிவாளர் ஜெனரல் குமரப்பன் நீதிபதி ஜெயச்சந்திரனிடம் தாக்கல் செய்தார்.

  உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு வரும் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்து முடிவு எட்டப்பட்டால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மற்றும் வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இன்பதுரையின் வக்கீல் மெமோவாக தாக்கல் செய்தார்.

23ம் தேதி வரை தடை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும்  ரவீந்திர பட் ஆகியோர்  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  இன்பதுரை தரப்பில் ஆஜரான  மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல்  ரோத்தகி  வாதத்தில்,”ராதாபுரம் தொகுதி தேர்தலை பொருத்தமட்டில் சரியான  முறையில் தான்  வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதனால் மறு வாக்கு எண்ணிக்கை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய  வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”ராதாபுரம் தொகுதி தேர்தல் விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : constituency ,Supreme Court , Referendum, Radapuram constituency, Supreme Court
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...