×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க மீண்டும் தடை

பென்னாகரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையை பொறுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த ஒருவாரமாக மழை இல்லாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 15000 கனஅடியாக அதிகரித்துள்ளது. சுமார் 2 மாதங்களாக ஆற்றில் பரிசல் சவாரி செல்லவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று நீர்வரத்து 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 5269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12848 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 118.82 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 118.80 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 91.56 டிஎம்சியாக உள்ளது.

Tags : Cauvery , Okenakkal, Cauvery water, gift barrier,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...