×

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு; 23-ம் தேதி முடிவுகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு

சென்னை: ராதாபுரம் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை ஐகோர்ட் வளாகத்தில் இன்று காலை தொடங்கிய மறுவாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. ஆனால் இதன் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அக்டோபர் 23-ம் தேதி வரை தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராதாபுரம் தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. எனவே, 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களின் கன்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும். இதற்காக 3 சுற்று வாக்கு இயந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், தபால் வாக்குகளை இன்று காலை 11 மணிக்கு எண்ணத்தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலை வாக்கு உண்ணும் பணி தொடங்கியது. மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பத்துரை, சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். ஆனால் முடிவுகளை வருகிற 23ம் தேதி வரை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Tags : Radhapuram Assembly Completion Revaluation ,Radhapuram ,Appavu ,Supreme Court ,AIADMK ,DMK ,Inbadurai Supreme Court , Radhapuram, Re-Count, Appavu, Inbadurai Supreme Court, Supreme Court, AIADMK, DMK
× RELATED மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து...