×

முதல் டெஸ்ட்; எல்கர், டீ காக் சதம் விளாசல்; அஸ்வின் அசத்தல்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா 385/8

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 385 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்திய - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து 2 நாள் ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா 115 (அ.இ), மயங்க்  அகர்வால் 84 (அ.இ) களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளைக்கு முன் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது.

இரண்டாம் நாளான நேற்று ஆரம்பம் முதலே ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். மயங்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது சதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 176 ரன்களில் கேசவ் மகராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 6, கேப்டன் விராத் கோஹ்லி 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். இவர் 215 ரன்களில் டீன் எல்கர் பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

ரவீந்திர ஜடேஜா 30, அஸ்வின் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி அஸ்வின் - ஜடேஜா சுழற்பந்து வீச்சுக்கு திணறியது. துவக்க வீரர் அல்டன் மார்க்ரம் 5, டிப்ரூய்ன் 4 ரன்களில் அஸ்வின் சுழலுக்கு இரையாகினர். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய டேன் பீட், ஜடேஜா சுழலில் போல்டு ஆனார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்திருந்தது.

டீன் எல்கர் 27, பவுமா 2 ரன்களுடன் 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். புவமா 18 ரன்களில் ஆட்டமிழக்க, எல்கருடன் டூ பிளசிஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். எல்கர் சதமடிக்க டூ பிளசிஸ்சிஸ் 55 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டி காக்குடன் ஜோடி சேர்ந்த டீன் எல்கர், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எல்கர் 160 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஒருபுறம் டீ காக் தனது சதத்தை பதிவு செய்தார். பின்னர் டீ காக்கும் 111 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 385 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. முத்துசாமி 12, கேசவ் மகாராஜ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி பந்துவீச்சில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.


Tags : Test ,Elgar ,match ,South Africa ,Ashwin ,De Kock ,India , India, South Africa, Test cricket, Elgar, De Kock, Ashwin
× RELATED ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பவுலரானார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்!!