×

கோரேகான் பீமா வழக்கு: கடந்த 3 நாட்களில் தலைமை நீதிபதி உட்பட 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்து விலகல்

புதுடெல்லி: கோரேகான் பீமா வழக்கு விசாரணையில் இருந்து கடந்த 3 நாட்களில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் கோரேகான் பீமா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லாகா, ஆந்திராவைச் சேர்ந்த கிராமிய பாடகர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 5 பேரும் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை எதிர்த்து நவ்லாகா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை அமர்வில் இருந்து கடந்த 1ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். அதே அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை விலகினர். பின்னர் இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நவ்லாகா வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்தார். கோரேகான் பீமா வழக்கில் இருந்து 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்து விலகியிருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை வேறொரு அமர்வு விசாரிக்கும் என்று கவுதம் நவ்லாகாவின் வக்கீலிடம் மற்ற 3 நீதிபதிகளும் தெரிவித்தனர்.

Tags : Goregaon Bima ,Succession of 5 Supreme Court ,judges ,Chief Justice , Goregaon Bima, litigation, Supreme Court justices, dissent
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...