×

ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளை வாங்க நிலவும் கடும் போட்டி: பங்குகளை விட 100 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பம்

புதுடெல்லி: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனான ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளை வாங்க 100 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 80,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் அதன் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுமார் 11 சதவிகித பங்குகளை விற்று 645 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் அரசு இயங்கியுள்ளது. ரயில்வே டிக்கெட், ரயில் நீர், கேட்டரிங் போன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி.யின் 2 கோடியே 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 225 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடன் இல்லாதது, வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் 112 மடங்குக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 315 முதல் 320 ரூபாய் வரை ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது பங்கு விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உடனடியாக லாபம் பார்க்கும் விதத்திலும் இந்த அளவுக்கு அதிகம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதத்தில் கணினி முறையில் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளன. டிமான்ட் அதிகமாக இருப்பதால் சிலருக்கு கேட்ட எண்ணிக்கையை விட குறைவான பங்குகளே கிடைக்கலாம், அல்லது கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Investors ,IRCDC ,IRCTC , IRCTC , stock, sales, investors
× RELATED இணைய வழி பயணசீட்டை ரத்து செய்தால், ஒரு...