×

ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை மாற்றக்கோரி 20 ஆண்டாக போராட்டம்

*இளையான்குடி அருகே மக்கள் குமுறல்

இளையான்குடி : இளையான்குடி அருகே ஊருக்கு நடுவே மயானம் அமைந்துள்ள மயானத்தை மாற்றக்கோரி 20 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது கொடிமங்கலம். இங்கு 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுவாக மயானங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த கிராமத்தில் ஊரின் நடுவே மயானம் அமைந்துள்ளது. இதனால் மக்கள் நீண்டகாலமாக நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை எரிக்கும்போது ஏற்படும் புகை நாற்றம் 2  நாட்கள் வரை கிராமத்தில் வலம் வரும்.

 இந்த நாற்றத்துடன் வீட்டில் நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது. ஊருக்கு நடுவே மயானம்  உள்ளதால் இரவானால் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். சில குடும்பங்கள் ஊரை விட்டே வெளியேறி விட்டனர். எனவே, ஊருக்கு வெளியே மயானத்திற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து கொடிமங்கலம் செல்வி கூறுகையில், ‘‘எந்த ஊரிலும் இல்லாத அநியாயம் கொடிமங்கலத்தில் உள்ளது. ஊரின் நடுவே மயானம் அமைந்துள்ளதால், குழந்தைகள் அச்சமடைவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மயானத்தை மாற்ற வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு அளித்துவிட்டோம். கலெக்டரிடமும் மனு கொடுத்துவிட்டோம்.

ஆனால் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதுடன், இதுவரை எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. மனசாட்சியே இல்லாமல் அரசின் திட்டங்களான பொது குளியல் தொட்டி போன்றவற்றை மயானத்திலேயே கட்டி வைத்துள்ளனர். எனவே மயானத்தை உடனடியாக ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும். அப்போதுதான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்’’ என்றார்.


Tags : center ,city ,village , Ilayankudi ,cemetry ,20 years protest
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...