×

மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல்!

வாஷிங்டன்: மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. செனட் சபையின் உறுப்பினர்கள் டெட் குரூஸ், ராபர்ட் மெனன்டெஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்தனர். அதில், இங்கிலாந்திடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் காந்தியடிகள் நடத்திய விடுதலை போராட்டத்தை இந்த தீர்மானம் அங்கீகரிக்கிறது.

அரசியல் மாற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி அகிம்சை போராட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்கு உதவியதுடன், உலகம் முழுவதிலும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற ஏராளமானோருக்கு உத்வேகமாகவும் அமைந்திருக்கிறது, என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சர்வதேச அகிம்சை தினத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இந்த தீர்மானம் ஆதரவு அளிப்பதுடன், அனைத்து அமெரிக்கர்களும் இதை கடைப்பிடிக்கவும் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது, என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த பின் பேசிய டெட் குரூஸ், அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்தும் காந்தியின் நிகரில்லா அர்ப்பணிப்பு, இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் எண்ணற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.

அவரது வாழ்வு, தியாகம், மரபு போன்றவை உலகுக்கு ஒளியாக தொடர்கிறது. அவரை தொடர்ந்து கவுரவிப்பதுடன், விடுதலை நாடுவோருக்கும் ஆதரவு அளிப்போம், என்று தெரிவித்தார். இதையடுத்து பேசிய ராபர்ட் மெனன்டெஸ், காந்தியை கவுரவிக்கும் இந்த தீர்மானத்துக்கு தலைமை தாங்குவதில் பெருமை அடைகிறேன். அவரது நினைவு உலகெங்கிலும் மதிப்புடன் போற்றப்படுகிறது. இந்திய மக்களின் விடுதலைக்கு மிகப்பெரும் உத்வேகமாக அவர் இருந்தார், என்று தெரிவித்தார். இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையிலும் காந்தியடிகளை கவுரவிக்கும் தீர்மானத்தை பெண் உறுப்பினர் கிரேஸ் மெங் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பல எம்.பி.க்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



Tags : houses ,Mahatma Gandhi ,parliament ,US ,birthday anniversary ,Senate , Resolution,US,Senate,Mahatma Gandhi
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்