×

4 ஆயிரம் கோடி பணிகளை கண்காணிக்க ஆளில்லாத நிலையில் 591 தற்காலிக பணியிடங்கள் நீர்வளத்துறையில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவால் பரபரப்பு

சென்னை: பொறியாளர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் நீர்வளத்துறையில் 591 தற்காலிக பணியிடங்களை தமிழக அரசு குறைத்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. அதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை கண்காணிக்க மண்டல தலைமை பொறியாளர் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக நீர்வளப்பிரிவில் நடைபெறும் திட்ட பணிகளை களத்தில் நின்று பாசன உதவியாளர், ெதாழில் நுட்ப உதவியாளர், பணி ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

ஆனால், தற்போது அந்த பணியிடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளது. குறிப்பாக, இளநிலை பொறியாளர் 900 பணியிடங்களும், உதவி பொறியாளர் 700 பணியிடங்களும், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப போதிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்து அதன் மூலம் திட்டம் மற்றும் அலுவலக பணிகளை கண்காணித்து வந்தனர். இதற்காக, 3,129 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், 2,633 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பணிகள் நடந்து வந்தது. ஆனால், அவர்களுக்கு தற்காலிக நியமன அடிப்படையில் ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும் வேலை கிடைக்காத நிலையில் இந்த ஊதியத்தில் இளைஞர்கள் வேலை செய்ய முன்வந்தனர். ஆனாலும், அதிகாரிகள் இந்த ஊழியர்களிடம் கெடுபிடி காட்டியதாலும், கூடுதல் வேலைப்பளு காரணமாகவும் ஊழியர்கள் சிலர் வேலையை விட்டு சென்று விட்டனர்.

 இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தற்காலிக பணியிடங்கள் மறுவரையறை செய்ய வேண்டும் என்பதால், இது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம், காலி பணியிடங்களை காரணம் காட்டி கூடுதல் பணியிடங்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தவறியதால் தற்போது 2,538 பணியிடங்களாக குறைத்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த பணியிடங்கள் வரை  செப்டம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 2021 வரை ஊழியர்களை பணி அமர்த்தி கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்களால் தவித்து வரும் நிலையில், தற்போது தற்காலிக பணியிடங்களை குறைத்து இருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : workplaces ,Tamil Nadu ,Water Resources: The State Government , Department of Water Resources, Govt
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...