×

ஓ.என்.ஜி.சி.யின் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தரக்கூடாது: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  காவிரிப் படுகையை  எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக காவிரி பாசன  மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்  ஓ.என்.ஜி.சி நிறுவனம்  விண்ணப்பித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன்  திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய 44 ஹைட்ரோ  கார்பன் கிணறுகள் இரு உரிமங்களின் அடிப்படையில்  கடலூர், நாகப்பட்டினம்,  ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி  மாநிலத்தின் காரைக்கால்  மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. காவிரி பாசன  மாவட்டங்களில் ஏற்கனவே 200-க்கும் கூடுதலான எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள  ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை  எடுத்து  வருகிறது.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க,  சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், காவிரி  பாசன மாவட்டங்களின் செழுமையை பாதுகாக்கும் வகையிலும் அங்கு இனி எந்தவொரு  ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஓ.என்.ஜி.சி  சார்பில் 44  இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு  தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.  அதேநேரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை   நிரந்தரமாக பாதுக்காக்க அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக  அரசு அறிவிக்க வேண்டும்.

Tags : ONGC ,Ramadas ,Hydrocarbon Wells , ஓ.என்.ஜி.சி,ஹைட்ரோ கார்பன் கிணறுகள், ராமதாஸ்
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...