×

மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின் ஆய்வுத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து, தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மின் வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்வது நல்லது. ஐஎஸ்ஐ முத்திரை உள்ள தரமான மின்சாதனைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளக்குகளை எடுக்கும் போதும்,  பொருத்தும் போதும் சுவிட்ச்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை உடனடியாக மாற்றுங்கள். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை வயர்களுக்கு அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் கம்பத்தின் மீது கொடி கட்டி துணிகளை காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.

மேலும் அதன் மீது பந்தல்கள் கட்டுவது, விளம்பர பலகைகளை கட்டுவது கண்டிப்பாக கூடாத ஒன்று. மழைகாலங்களில் மின்மாற்றிகள்,  மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் யாரும் செல்லக்கூடாது. மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டே கட்ட வேண்டும். மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையம் அருகே சிறுநீர்  கழிக்க செல்லக்கூடாது.  இடி அல்லது மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடி பகுதி, பஸ் நிலைய நிழற்குடையின் கீழ் பகுதியில் தஞ்சம் புகக்கூடாது. மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்ச்சை ஆப் செய்ய வேண்டும்.

Tags : accidents ,public ,Department of Electrical Research , Electrical accidents, electrical inspection
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...