×

ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ பதவி தப்புமா? இன்று காலை மறு ஓட்டு எண்ணிக்கைூ தபால் மற்றும் 3 சுற்று ஓட்டு எண்ணப்படுகிறது

* ஐகோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
* தபால் மற்றும் 3 சுற்று ஓட்டு  எண்ணப்படுகிறது
* ஐகோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகள் மற்றும் 19 முதல் 21ம் சுற்று வரையிலான மின்னணு வாக்குகளை இன்று காலை 11.30 மணிக்கு எண்ணத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   

 இதையடுத்து, ராதாபுரம் தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பாவு சார்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிடும்போது, தபால் வாக்குகளில் 203 வாக்குகளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் சான்று அளித்துள்ளார். இதை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. மேலும், 19 முதல் 21ம் சுற்று எண்ணிக்கையும் ேதர்தல் விதிகளுக்கு முரணாக நடந்துள்ளது என்று வாதிட்டார்.

இன்பதுரை சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம் ஆஜராகி, இன்பதுரை வெற்றி சரியான விதிகளின்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. எனவே, 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களின் கன்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும்
மீண்டும் எண்ண வேண்டும். இதற்காக 3 சுற்று வாக்கு இயந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் வரும் 4ம் தேதி (வியாழக்கிழமை) 11.30 மணிக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இன்பதுரை சார்பில் மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு நாளை (இன்று) விசாரணைக்கு வரலாம் எனவே, உத்தரவை 3 வாரங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். ேமலும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் இட்டது சரியா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்பாவு சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்தால் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க முடியும். உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுதான் பிறப்பித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், தபால் வாக்குகளை நாளை (இன்று) காலை 11 மணிக்கு எண்ணத்தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.அப்போது, இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், நாளை (இன்று) மாலை 4 மணிக்குமேல் தபால் வாக்குகளை எண்ணுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இந்த கோரிக்கையை ஏற்காத நீதிபதி, காலை 11.30 மணிக்கு வாக்குகளை எண்ண உத்தரவிடுகிறேன். உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் இந்த நீதிமன்றம் அதை அமல்படுத்தும் என்று தெரிவித்தார். இதையடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு ராதாபுரம் தொகுதி தபால் வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட 203 வாக்குகளும், 19,20,21ம் சுற்று வாக்குகளும் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான இடம் இன்று காலை அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பால்பாண்டி உள்பட 24 பேர் பேரை நியமனம் செய்து நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்கு இயந்திர நிபுணர்களும் வாக்கு எண்ணும் பணியின்போது இருப்பார்கள். வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற பதிவாளர்கள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், தேர்தல் வழக்கு தொடர்ந்த அப்பாவு மற்றும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை ஆகியோரின் வக்கீல்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

ஓட்டு எண்ண 24 பேர் தேர்வு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 29,50,633 பேர் பயன் அடைந்துள்ளனர். இதில் 1.65 லட்சம் பேர் திருத்தங்கள் செய்துள்ளனர். வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி திருத்தம் செய்யலாம். ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21 ஆகிய சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணுவதற்கான ஏற்பாடு தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக 24 பேரை தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதன்படி அனுபவம் உள்ள 24 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ராதாபுரம் வாக்கு இயந்திரங்கள் நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டது தபால் வாக்குச்சீட்டுகள் இருந்த இரும்பு பெட்டி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 11.15 மணிக்கு ஆயுதம் தாங்கிய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை ராமயைன்பட்டி கொண்டு வரப்பட்டது. பின்னர் ராமையன்பட்டி ஒழுங்கு முறை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடைசி 3 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான 36 இயந்திரங்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது. அவற்றை இன்று காலை சென்னை ஐகோர்ட் பதிவாளரிடம் அதிகாரிகள் ஒப்படைக்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை:
இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”ராதாபுரம் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி உத்தரவில், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. நீதிமன்ற பட்டியலில் இடம்பெற்றால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மனு பட்டியலிடப்பட்டு, இன்று விசாரணைக்கு வருகிறது. அப்பாவு கேவியட்: இன்பதுரையோ, மூன்றாவது நபரோ மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தால் என் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அப்பாவு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : resignation ,Radhapuram AIADMK MLA ,rounds , Radapuram PM MLA, Vote Count, Postal, 3 rounds
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...