×

மோடி - சீன அதிபர், மாமல்லபுரம் வருகையை ஒட்டி பேனர் வைக்க அரசுக்கு அனுமதி: விதிகளை மீறக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் மூன்று நாள் நடைபெறும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பேனர் வைக்க அனுமதி அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12, 13ம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மற்றும் சீன அதிபரை பேனர்களை வைத்து வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பேனர் வைக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் தற்போது பிரதமரை வரவேற்க பேனர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில்,  தமிழக அரசு சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளதால் பேனர்களை வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி தரவில்லை. நல்லெண்ண அடிப்படையில் சீன அதிபர் இந்தியா வருகிறார். அவரை வரவேற்க மத்திய அரசு சார்பில் சென்னை மாநகரில் 14 இடங்களிலும் கிழக்கு கடற்கரை சாலையில் 9 இடங்களிலும், மாமல்லபுரத்தில் 2 இடங்களிலும் பேனர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி,  பேனர் வைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். தேவைப்பட்டால் ஒவ்வொரு பேனர் அருகில் ஒருவரை பாதுகாப்புக்காக நிறுத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.அப்போது திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, சீன நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பண்டைய காலத்தில் இருந்தே வணிக தொடர்பு உள்ளது. சீன அதிபர் தமிழகம் வருவதை வரவேற்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாங்களும் வரவேற்கிறோம் என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜேந்திர சோழன் சீன நாட்டுக்கு தூதுவரை அனுப்பிய வரலாறும் உள்ளது தெரியுமா என்றனர்.

தொடர்ந்து மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, பேனர்கள் வைத்து தான் வரவேற்பு அளிக்க வேண்டுமா. மலர் தூவி வரவேற்கலாம். அரசு சார்பில் பேனர் வைக்க அனுமதி கோரத் தேவையில்லை. விதிகளை பின்பற்றினாலே போதுமானது.  உயர் நீதிமன்றத்தில் அனுமதியும் கோர தேவையில்லை. இதற்கிடையே, பேனர் வைக்க அனுமதி அளிக்கும் அதிகாரியே இந்த வழக்கை தொடர்ந்து இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைக்க வாய்ப்புள்ளது என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் விதிகளை மீறி பேனர் வைக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ளது. விதிகளுக்கு உட்பட்டு பேனர் வைக்கலாம். எனவே இதில் அரசு சார்பில் எந்த உத்தரவாதமும் தர தேவையில்லை.
நீதிமன்றத்தின் அனுமதியும் அரசு கோர தேவையில்லை. பிரதமர் மற்றும் சீனா அதிபர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைப்பது தொடர்பான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். அது அரசின் கடமையாகும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Chancellor ,Chinese ,Modi ,arrival ,Mamallapuram Mamallapuram ,Chancellor Selects , Modi, Chinese President, Mamallapuram, HC
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்