×

மாத்தூர் மஞ்சம்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மாத்தூர் மஞ்சம்பாக்கம் பகுதியில்  நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாதவரம்,   மாத்தூர், மஞ்சம்பாக்கம்  போன்ற பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் சிலர் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, டேங்கர் லாரிகள் மூலம் நட்சத்திர ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் உறிஞ்சி விற்கப்படுவதால், சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, தனியார் நிலங்களில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இப்பகுதியில் தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாத்தூர் மஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிலத்தடி நீர் திருட்டை தடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, மாத்தூர் காமராஜர் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து  மாதவரம் தாசில்தார் சரவணன், மணலி குடிநீர் வழங்கல் அதிகாரிகள் மற்றும் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக புகார் கொடுத்தால் வநடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர். இதைத் தொடர்ந்து போராட்டதை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, தனியார் மாந்தோப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யக்கூாடாது, என எச்சரித்து விட்டு சென்றனர்.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘தனியார் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, நிலத்தடி நீரை எடுக்க முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், என்று நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி தற்போது 40 மீட்டர் ஆழத்திற்கு ஆழ்துளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச குடிநீர் வாரிய அதிகாரிகள் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளனர். இவ்வாறு பெற்ற அனுமதியை வைத்துக்கொண்டு 500 முதல் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்று வருகின்றனர். இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தும், சம்மந்தப்பட்டவர்களிடம் மாதம்தோறும் பணம் பெற்றுக்கொண்டு, கண்டும் காணாமல் உள்ளனர். இது மக்களுக்கு செய்கின்ற துரோகம் மட்டுமின்றி எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும். தனியார் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அவ்வாறு செய்யபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிப்பதே இல்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

சட்ட விரோதம்
மாதவரம் பால் பண்ணை, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை மற்றும் மாத்தூர் போன்ற இடங்களில் அப்போதைய மாதவரம் தாசில்தார் முருகானந்தம், குடிநீர் வழங்கல் வாரிய செயற் பொறியாளர் ராஜா ஆகியோர் சோதனை நடத்தி, சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்தனர். ஆனால், அதன் பின்னர் வெளியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து சுத்திகரித்து விற்பனை செய்கிறோம், எனக்கூறி மீண்டும் மேற்கண்ட நிறுவங்கள் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றன.

குடிநீர் வாரியம் அடாவடி
மாத்தூர் மஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்ச கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச குடிநீர் வழங்கல் வாரியம் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால் இவ்வாறு நிலத்தடி நீர் உறிஞ்ச அனுமதி வழங்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

தனியார் நிலங்களில் ஆழ்துளை கிணறு  அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் தடை  விதித்துள்ளது. மேலும் , அவ்வாறு செய்யபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும்  உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிப்பதே இல்லை

Tags : area ,Ground water theft ,Mathur Manchambakkam ,Mathur Manjambakkam , Mathur Manjambakkam ,demanding , ground water, theft
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...