×

மூன்று நாள் கொண்டாட்டம்

புரட்டாசி மாதத்தை நவராத்திரி விழா சிறப்படைய வைக்கிறது. இவ்விழாவிற்குப் பின்னே ஒரு பழமை வரலாறு வாழ்கிறது. அரசுரிமை இழந்து மன்னன் சுகேது  வருந்தினார். அப்போது அவரது மனைவி துவேதியை நவராத்திரி விரதம் மேற்கொள்ளும்படி ஆங்கீரச முனிவர் வேண்டினார். இந்த விரதம் மேற்கொண்டதன் விளைவாக இழந்த நாட்டை இவர்களின்  அரசகுமாரன் சூரியப்பிரதாபன் மீட்டெடுத்தார். இவ்வாறு இவ்விரதம் மேற்கொள்வோர் எல்லா  செல்வங்களும் அடைந்து உயர் பதவி அடைவர் என்பது நம்பிக்கை.வீர தீர செயல்களை பாராட்டும் அடையாளமாக துர்க்கைக்கும், செல்வ உற்பத்தி பொருட்களை  பாராட்டும் விதமாக லட்சுமிக்கும், கல்வியை, கலையை, வித்தையை பாராட்டும் வகையில்  சரஸ்வதிக்குமென தலா 3நாட்கள் ஒதுக்கி பூஜையிட்டு இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. மதுரை நாயக்க மன்னர்களால் தமிழகத்தில் இவ்விழா வேரூன்றி பரவியது. இவர்களுடன் தொடர்பு  கொண்டிருந்த ராமநாதபுரம் சேதுபதி போன்ற குறுநில மன்னர்களின் அரண்மனைகளிலும் இந்த விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நம் பொம்மைக் கலைஞர்களின் ஆற்றலை இந்த நவராத்திரி விழாதான்  வெளிக்காட்டுகிறது.

இந்த களிமண், பேப்பர் பொம்மைகள் கலை வெளிப்பாட்டுடன் இதிகாசக் கதைகளை  சித்தரித்தும் வரலாறு வாசிக்கிறது. அன்று வீடு, கோயில், அரண்மனையில் கலை, வீரம், பக்தி  வெளிப்பாடாக இருந்த இவ்விழா, இன்று பக்தியை மட்டுமே முன்னிலைப்படுத்தி நிற்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் இன்ன இன்ன கோலம் வீட்டு முன்பு வரைய வேண்டும் என்று  ஆதிசங்கரர் படைத்த சவுந்தர்ய லஹரியில் விவரிக்கப்பட்டுள்ளதும் இங்கு நினைவு கூறத்தக்கது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என இம்மூன்று நாட்கள் பூஜைக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த ஆன்மிகக்  கொண்டாட்டத்தில் அனைவரையும் மூழ்கடித்து விடுகிறது.


Tags : celebration , A three-day, celebration
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்