×

மைசூரு தசரா விழாவில் இடம் பெறும் 700 ஆண்டு பழமையான தங்க அம்பாரி

நவராத்திரி பண்டிகை என்றாலே மைசூரு தசரா அனைவரின் நினைவுக்கு வரும். மைசூரு தசரா விழாவில் பாரம்பரிய கலை, நாட்டுபுற கலை, விவசாயிகள் தசரா, மல்யுத்தம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது விழாவின் பத்தாவது நாளான விஜயதசமி நாளில் நடக்கும் யானை ஊர்வலமும், அதில் சாமுண்டீஸ்வரி தேவியை அலங்கரித்து கொண்டு செல்லப்படும் தங்க அம்பாரியும் முக்கிய இடம் பிடித்துள்ளன.மைசூரு மன்னர் பரம்பரையின் சின்னமாக கருதப்படுவது தங்க அம்பாரி. தங்கம், வைரம், வெள்ளி, ரத்தினம், மாணிக்கம் உள்ளிட்ட கனிமங்கள், யானைத் தந்தம், சந்தனக் கட்டை மற்றும் மதிப்பு மிக்க பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தை மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பயன்படுத்தி வந்தனர். நவராத்திரி விழா நாட்களில் இந்த தங்க அம்பாரியில் அமர்ந்து தர்பார் நடத்துவார்கள். அப்போது மன்னார் அரசாட்சியின் கீழ் உள்ள பகுதியில் இருந்துவரும் மக்களுக்கு மன்னர்கள் தானம், தர்மம் வழங்கியுள்ளனர்.  விஜயதசமி நாளில் யானை மீது தங்க அம்பாரி பொருத்துவார்கள். அதில் அமர்ந்து மன்னர் வீதி உலா அழைத்து வரப்படுவார். நாடு சுதந்திரம் பெற்று மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தபின், விஜயதசமி நாளில் நடக்கும் யானை ஊர்வலத்தின் போது, மன்னருக்கு பதிலாக சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து ஊர்வலம் எடுத்துவரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அம்பாரியை காண்பதற்கான லட்சக்கணக்கான மக்கள் தசரா விழா நாளில் கூடுகிறார்கள்.

தங்க சிம்மாசனத்திற்கு வரலாறு உள்ளது.  தற்போது மன்னர் குடும்பத்தின் சின்னமான இந்த சிம்மாசனம் மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் யது வம்சத்தை சேர்ந்த 22 மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர். தனித்தனியே 3 பகுதிகளாக உள்ள சிம்மாசனத்தை மீண்டும் கட்டமைக்க ஒரு மணி நேரம் ஆகும். இந்த சிம்மாசனம் அஸ்தினாபுரத்தை ஆண்ட தர்மராயா என்பவர் முதலில் பயன்படுத்தியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அரசாட்சிக்கு பின் மைசூரு மகாராஜா இதை கைப்பற்றினார். இதையடுத்து மைசூரு மன்னர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். நவராத்திரி நாளில் பயன்படுத்த மூன்று பிரிவுகளாக இருக்கும் அம்பாரியை ஜோடிப்பது பெரிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. 400 கிலோ எடை கொண்ட சிம்மாசனம் படிக்கட்டுகள் உள்ளிட்ட 3 முக்கிய பாகங்களை உள்ளடக்கி  உள்ளது. மாவிலை, வாழை குலை உள்ளிட்டவை கொண்டு இது அலங்கரிக்கப்படும். சிம்மாசனத்தின் உச்சியில் தங்க குடை அமைக்கப்பட்டிருக்கும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் உருவமும் சிம்மாசனத்தில் அமைந்திருக்கும். சந்தனத்தால் ஆன சிங்க முகங்களும் இடம்பெற்று இருக்கும். மேலும்  சிம்மாசனத்தில் பொருத்தப்பட்டுள்ள குடையில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருக்கும். இப்படி பல சிறப்புகள் அடங்கிய தங்க சிம்மாசனத்தை வரும் 8ம் தேதி நடக்கும் யானை ஊர்வலத்தின் போது, கண்டுகளிக்க பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.


Tags : Ambari ,Mysuru Dasara Festival ,venue , 700-year-old, golden Ambari, Mysuru Dasara Festival
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...