×

வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி வாலிபரை காரில் கடத்தி தர்ம அடி: 4 பேரிடம் விசாரணை

அண்ணாநகர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (29). இவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதன்படி வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகி உள்ளார்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி விஷ்ணு பிரசாத் பூந்தமல்லியில் இருப்பது தெரிந்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த 4 பேர் அங்கு சென்றனர். பின்னர், அவரை காரில் கடத்தி வந்து, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவரது தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘உங்களது மகனை கடத்தி விட்டோம். எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் தான் அவரை விடுவிப்போம்,’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, விஷ்ணு பிரசாத் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரும், தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் இருந்து விஷ்ணு பிரசாத்தை  காரில் ஏற்றி, வேறு இடத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சென்றபோது, விஷ்ணு பிரசாத் ‘காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த ரோந்து போலீசார், அந்த காரை மடக்கி, விஷ்ணு பிரசாத்தை மீட்டனர். காயமடைந்த நிலையில் இருந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : persons ,millions , Many ,lakhs scam , abducting, youth , car
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...