×

ஈராக்கில் போலீசார் துப்பாக்கிச்சூடு போராட்டக்காரர்கள் 13 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டம் நேற்று மூன்றாவது நாளை எட்டியது. பல்வேறு பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டு அரசுக்கு  எதிராக முழக்கமிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு போராட்டங்களுக்கு தடை விதித்து பிரதமர் அதெல் அப்தெல் மாதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். பாக்தாத் மற்றும் பல்வேறு தெற்கு நகரங்களில் போராட்டக்காரர் மற்றும் போலீசார் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த செவ்வாய் முதல் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். மேலும் 400 பேர் காயமடைந்தனர். நேற்று காலை தஹிரிர் சதுக்கத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர்  புல்லட் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். இதனிடையே இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாக போராட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமலும், புகைப்படங்களை பகிர  முடியாமலும் அவதிபட்டனர்.

Tags : gunmen ,Iraq , Thirteen, gunmen , Iraq
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில்...