×

அமெரிக்காவுடன் தலிபான்கள் மீண்டும் பேச்சு நடத்த பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதலுக்கு விரைவில் தீர்வு காண தலிபான்கள் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் உள்ளனர். இதனால் இங்கு அடிக்கடி அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது. இதை தவிர்க்க அமெரிக்கா தனது பாதுகாப்பு படை வீரர்களை இங்கு  அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அரசு படையுடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருந்தனர். கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க படை வீரர்  உள்பட பலர் உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தார். இதையடுத்து தலிபான்கள் அரசியல் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த குழுவினர் நேற்று பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசியுடன் ஒன்றரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து அமைச்சர் குரேசி கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான்கள் எடுத்துவரும் நடவடிக்கையை பாராட்டுகிறேன். ஆப்கானிஸ்தானில் நிலவும் மோதலுக்கு ராணுவம் மூலம் தீர்வுகாண முடியாது. எனவே தலிபான்கள் விரைவில் ஆப்கன் மோதலுக்கு தீர்வு  காணவேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே தலிபான்கள் மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கன் மோதலுக்கு தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Pakistan ,talks ,Taliban ,US , Taliban ,US, Pakistan, talks ,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...