×

அமெரிக்க ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் இந்தியா-பாக். போர் ஏற்பட்டால் 12.5 கோடி பேர் பலியாவர்கள்

வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12.5 கோடி பேர் பலியாவார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக் கழகங்கள் இணைந்து `எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை `சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற  இதழில் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 200 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணு  ஆயுதப்போர் ஏற்பட்டால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இரண்டாம் உலகப் போரை விட இருமடங்குக்கு அதிகமாக உயிரிழப்பு இருக்கும்.அப்போது பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் 15 கிலோடன் எடை கொண்டதாக இருக்கும். இவை கடந்த 1945ல் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா பயன்படுத்திய அணு ஆயுதத்தின் அளவாகும். போர் நடக்கும்பட்சத்தில் ஒரே  வாரத்தில் 5 லட்சம் முதல் 12.5 கோடி பேர் வரை பலியாக கூடும். இதற்கு முன் மனித இனம் சந்தித்திராத போராக அது இருக்கும். போரினால் தாக்க்கப்படும் இடங்களில் மட்டுமின்றி உலக அளவில் அணு குண்டுகளால் பாதிப்பு ஏற்படும்.  

காஷ்மீர் பிரச்னைக்காக இந்த இருநாடுகளும் இதற்கு முன்னர் பலமுறை போரிட்டிருந்தாலும், 2025ம் ஆண்டில் போர் ஏற்பட்டால், 400 முதல் 500 வரையிலான அணு ஆயுதங்கள் மொத்தமாக பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது ஒன்பது நாடுகள்  அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. அவற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே தங்களது அணு ஆயுதக் கிடங்குகளை வெகு வேகமாக கட்டமைத்து வருகின்றன. அதிகளவு மக்கள்தொகை கொண்ட நாடுகளாக இருப்பதால்  உயிரிழப்பும் அதிகமாகவே இருக்கும். அணு ஆயுதங்கள் வெடிப்பினால் ஒரே வாரத்தில் 1.6 கோடி முதல் 3.6 கோடி டன் கார்பன் துகள்கள் காற்றில் கலந்து உலகம் முழுவதும் காற்று மாசை ஏற்படுத்தும். இவை சூரிய ஒளியை உள்ளிழுத்து கொள்வதால் பூமிக்கு கிடைக்கும்  வெளிச்சம் 20 முதல் 35 சதவீதம் வரை குறையும். இதனால் பூமியின் தட்பவெப்ப நிலையில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர் கூடும். உலகளாவிய அளவில் மழையும் 15 முதல் 30 சதவீதம் குறையும். இவை இரண்டும் மண்டல  ரீதியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.அதேபோல் விவசாயம் 30 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும். கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி 15 சதவீதம் வரை குறையும். இந்த ஒட்டு மொத்த பாதிப்புகளில் இருந்து வெளிவர குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேலாகும். எதிர்பாராத  இந்த அணு ஆயுதப் போரில் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. அது தற்போதே அவற்றை அழித்துவிடுவது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : event ,US ,war , Trauma,US study, India-Pak. , war,,killed
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...