×

தீவிரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை எதிரொலி பாதுகாப்பு வளையத்தில் திருப்பதி

* அதிநவீன துப்பாக்கிகளுடன் ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் குவிப்பு

திருமலை : தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த எச்சரிக்கையை தொடர்ந்து, திருப்பதி மலை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு விலக்கிய பிறகு, இந்தியாவில் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாகவும்,  தென்னிந்தியாவில் முக்கிய நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுத்துறை தெலங்கானா, தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை தீவிரவாதிகளாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

பக்தர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக ஆந்திர மாநில போலீசார் 4,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையை சேர்ந்த 2 குழுவினர் வந்துள்ளனர். இதுதவிர ஆந்திர ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள் 80 பேர் எஸ்பி விஷால்குன்னி தலைமையில்    துப்பாக்கிகளுடன் திருமலை முழுவதும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். நான்கு மாட வீதி மற்றும் உயரமான கட்டிடத்தில் குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, இன்று இரவு கருட வாகன சேவை நடக்கிறது. இதில் பல லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

சர்வ பூபாள வாகனம்


திருப்பதி பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து இரவு சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கிடையே, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்  கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. அது இன்று காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்படவுள்ளது.

Tags : Thirupathi ,terrorists , Thirupathi , security ring, alerting the terrorists
× RELATED திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும்...