×

மயங்க் அகர்வால் 215, ரோகித் சர்மா 176 முதல் டெஸ்டில் இந்தியா ரன் குவிப்பு : தென் ஆப்ரிக்க அணி தடுமாற்றம்

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மயங்க் அகர்வால் இரட்டை சதமடிக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 39 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. இந்திய - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 115 (அ.இ), மயங்க்  அகர்வால் 84 (அ.இ) களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளைக்கு முன் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. இரண்டாம் நாளான நேற்று ஆரம்பம் முதலே ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். மயங்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது சதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 176 ரன்களில் கேசவ் மகராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 6, கேப்டன் விராத் கோஹ்லி 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.

இவர் 215 ரன்களில் டீன் எல்கர் பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 30, அஸ்வின் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி அஸ்வின் - ஜடேஜா சுழற்பந்து வீச்சுக்கு திணறியது. துவக்க வீரர் அல்டன் மார்க்ரம் 5, டிப்ரூய்ன் 4 ரன்களில் அஸ்வின் சுழலுக்கு இரையாகினர். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய டேன் பீட், ஜடேஜா சுழலில் போல்டு ஆனார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்துள்ளது. டீன் எல்கர் 27, பவுமா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் மாறி உள்ளதால், இன்று விரைவாக விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி பாலோ- ஆன் பெறவும் வாய்ப்புள்ளது.

சாதனை மேல் சாதனை

* ரோகித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்தது. சர்வதேச அளவில் இது 12-வது, இந்திய அளவில் 2-வது சிறந்த துவக்க வீரர் பார்ட்னர்ஷிப். 2006ல் சேவக் - டிராவிட் ஜோடி பாகிஸ்தானுக்கு எதிராக 410 ரன்கள் எடுத்துள்ளது.
* துவக்க வீரராக களமிறங்கி சதமடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா எட்டினார். முன்னதாக ஷிகர் தவான் (187), கே.எல்.ராகுல் (110) மற்றும் பிரித்வி ஷா (134) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
* ரோகித் ஷர்மா இந்திய மைதானங்களில் விளையாடிய கடந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் அரை சதத்தை கடந்து சாதித்துள்ளார். இவரது கடைசி 6 டெஸ்ட் ஸ்கோர் வருமாறு: 82, ஆட்டமிழக்காமல் 51, ஆட்டமிழக்காமல் 102, 65, ஆட்டமிழக்காமல் 50, தற்போது 176. முன்னதாக, ராகுல் டிராவிட் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் 4வது சதம் இது. இந்த சதங்கள் அனைத்துமே இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டவை.
* சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 98.22 சராசரி ரன்கள் என்ற டான் பிராட்மேனின் சாதனையையும் நேற்று ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார். கிரிக்கெட் பிதாமகன் என அழைக்கப்படும் டான் பிராட்மேன், சொந்த மண்ணில் 33 போட்டிகளில் 50 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த சாதனையை படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா 10 டெஸ்ட் போட்டிகளில், 15 இன்னிங்ஸ்கள் ஆடி இந்த சராசரியை சமன் செய்துள்ளார்.

Tags : Mayank Agarwal 215 ,Rohit Sharma 176 India First Test ,South Africa ,South African Stumble ,Rohit Sharma 176 First Test ,India , Mayank Agarwal 215, Rohit Sharma 176 ,First Test ,India
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...