×

தமிழகத்தில் அஜினமோட்டோவுக்கு தடை? : அமைச்சர் கருப்பணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினமோட்டாவுக்கு தடைவிதிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கல்வி மையம், டிரான்போட்டேசன் இன்ஜினியரிங் சார்பில் காற்று மாசை குறைப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு நேற்று காலை தொடங்கியது. கருத்தரங்கின் துவக்க நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பங்கேற்றார். மாசு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டும் புதிது புதிதாக பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்படும். அதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும்  தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு விரைவில்  வெளியிடப்படும். 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை தொடரும். பிளாஸ்டிக் தடையை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அஜினமோட்டோவுக்கு தமிழகத்தில் தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடித்தபின் உரிய முடிவு அறிவிக்கப்படும்.


Tags : Ajinamoto ,Tamil Nadu ,Karupanan ,Ban , Ajinamoto's ban , Tamil Nadu
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...