×

கர்நாடகாவில் முதல்வர்-பாஜ தலைவர் மோதல் என் வழி தனி வழியாகி விடும் : நளின்குமாருக்கு எடியூரப்பா கடும் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, பாஜ தலைவர் நளின்குமார் இடையே மோதல் வலுத்துள்ளது. கர்நாடக  பாஜவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று காலை 9 மணி அளவில்  பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பா  வீட்டுக்கு சென்றார். அங்கு எடியூரப்பாவை சந்தித்த நளின்குமார் கட்டீல்  சுமார் 30 நிமிடங்கள் அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது  எடியூரப்பாவுக்கும், பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் இடையே  கடும் வார்த்தை போர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடும்  கோபம் அடைந்த முதல்வர் எடியூரப்பா, நளின்குமார் கட்டீலை கடுமையாக விமர்சனம்  செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளியில் வந்த நளின்குமார்  நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். சுமார் 30  நிமிடம் நிகழ்ந்த  இந்த சந்திப்பின்போது  கட்சியின் நடவடிக்கை குறித்து  முடிவெடுக்கும்போது தனது ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக  எடியூரப்பா கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும்,  கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள்  அனைத்தும் தனக்கு எதிராகவே  எடுக்கப்படுவதாக எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக பெங்களூரு  மாநகர மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை  நடத்துவதில் தனது கருத்தை கேட்காமலேயே செயல்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு  எதிராக செயல்பட்டதால் நிர்மல் சுரானா மற்றும் பானுபிரகாஷ் ஆகியோர்  கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அவர்களை கட்சியில்  சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கவுரவத்திற்காவது என்னிடம் ஒரு வார்த்தை  ேகட்டிருக்க வேண்டும் என எடியூரப்பா நளின்குமார் கட்டீலிடம் கோபமடைந்துள்ளார்.  

எந்த  ஒரு விவகாரத்திலும் உங்கள் விருப்பம்போல் செயல்பட்டால், நானும் இனி எனது  விருப்பம் போல் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கண்டிப்புடன்  கூறியுள்ளார். ஏற்கனவே, பாஜவில் கோஷ்டி மோதல் அதிகரித்திருப்பது  அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது முதல்வர்  எடியூரப்பாவுக்கும், பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது முற்றி வருவது கட்சி–்க்குள் மேலும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,BJP ,Karnataka ,clash ,Yeddyurappa ,leader clash ,Nalin Kumar CM , CM-BJP leader clash, Karnataka
× RELATED கர்நாடக மாஜி பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் இணைந்தனர்