×

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார்

புதுடெல்லி:  டெல்லியில் இருந்து காத்ரா வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகின்றது. அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டாவது சேவை நேற்று தொடங்கப்பட்டது. டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ள காத்ரா வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “டெல்லி - காத்ரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சி மேம்பாட்டுக்கான சிறந்த பரிசாகும்.

சட்டப்பிரிவு 370 நாட்டின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. இந்த பிரிவை நீக்கியதன் மூலமாக நாம் தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்குவதில் வெற்றி பெறுவோம்.   சுற்றுலா ஊக்குவிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் திகழும். வளர்ச்சிக்கான பயணமானது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உடன் தொடங்கியுள்ளது” என்றார். விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களும் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்” என்றார்.

முதலில் ‘ரயில் 18’ என்று அழைக்கப்பட்ட இந்த ரயிலானது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும். ஜம்மு காஷ்மீரின் காத்ராவை பிற்பகல் 2 மணிக்கு அடையும். காத்ரா செல்லும் வழித்தடத்தில் அம்பாலா கான்டோன்மென்ட், லூதியானா, ஜம்மு தவாய் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். இதேபோல் பிற்பகல் 3 மணிக்கு காத்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு டெல்லி வந்தடையும். செவ்வாய்க்கிழமை தவிர வாரம் முழுவதும் இந்த ரயில் இயக்கப்படும். மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படும். 8 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து காத்ராவை சென்றடையும். இதன் மூலம் 12 மணி நேரமாக இருந்த பயணம் நேரம் 8 மணியாக குறையும். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிநவீன வசதிகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது. 16 பெட்டிகள் குளிரூட்டப்பட்ட வசதி  கொண்டவை. 180 டிகிரி கோணத்தில் சுழலும் இருக்கைகள். தானாகவே திறந்து மூடும் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. கற்கள் வீசினாலும் உடையாத வகையில் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பண்டங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் அறையில் ஐஸ்கிரீம்கள் மற்றும் வரவேற்பு குளிர்பானங்களை வைப்பதற்கான ப்ரீசர் உள்ளது. மேலும் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றும் வகையில் மறுசுழற்சி இயந்திரங்கள், முதல் மற்றும் கடைசி பெட்டியில் இடம்பெற்றுள்ளது.

வைஷ்ணவிதேவி பக்தர்களுக்கான பரிசு

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து பிரதமர் ேமாடி தனது டிவிட்டரில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள எனது சகோதர, சகோதரிகள், மற்றும் வைஷ்ணவி தேவி பக்தர்களுக்கான நவராத்திரி பரிசு இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில். டெல்லியில் இருந்து ைவஷ்ணவி தேவி கோயில் உள்ள காத்ரா வரை இயக்கப்படும் இந்த ரயில் ஒரு இணைப்ைப உருவாக்குவதோடு, ஆன்மிக சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Amit Shah ,Vande Bharat Express , Vande Bharat Express ,Railway Minister, Amit Shah inaugurated
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...